சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே, முள்ளங்காடு கிராமத்தில் சுமார் 10 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருந்த விநாயகர், அய்யனார், பூரணித்தாள், பொற்கொடியாத்தாள் மற்றும் கருப்பசாமி ஆகிய 5 ஐம்பொன் உற்சவர் சிலைகள் இன்று அதிகாரிகளால் மீட்கப்பட்டு, புளியங்குடியிருப்பு கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதையொட்டி முள்ளங்காடு மற்றும் புளியங்குடியிருப்பு ஆகிய இரு கிராமங்களிலும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காரைக்குடி அருகே உள்ள முள்ளங்காடு மற்றும் புளியங்குடியிருப்பு கிராம மக்கள் பாரம்பரியமாக இணைந்து திருவிழா நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. நூறாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த வழக்கத்தில், ஒரு ஆண்டு முள்ளங்காடு கிராமத்திலும், அடுத்த ஆண்டு புளியங்குடியிருப்பு கிராமத்திலும் திருவிழா நடத்தப்பட்டு வந்ததாகவும், அதற்காக விநாயகர், அய்யனார், பூரணித்தாள், பொற்கொடியாத்தாள் மற்றும் கருப்பசாமி ஆகிய 5 ஐம்பொன் உற்சவர் சிலைகள் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இரு கிராம மக்களும் ஆண்டுதோறும் முறை வைத்து இந்த சிலைகளை மாற்றி மாற்றி பராமரித்து வழிபட்டு வந்ததாக தெரிகிறது.
10 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்ட சிலைகள்
இந்த நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருவிழா நடத்துவது தொடர்பாக இரு கிராம மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பின்னர் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து 5 ஐம்பொன் உற்சவர் சிலைகளையும் முள்ளங்காடு கிராமத்தினர் அங்குள்ள கோவிலில் வைத்து பூட்டி பாதுகாத்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக புளியங்குடியிருப்பு கிராம மக்கள் நீதிமன்றத்தை நாடினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், முள்ளங்காடு கிராமத்தினர் தங்களிடம் உள்ள ஐம்பொன் சிலைகளை புளியங்குடியிருப்பு கிராமத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், நீதிமன்ற உத்தரவில் சிலைகளை எப்போது ஒப்படைக்க வேண்டும் என்பதற்கான குறிப்பிட்ட கால அவகாசம் எதுவும் வழங்கப்படவில்லை என புளியங்குடியிருப்பு கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை
இதையடுத்து சிலைகளை முள்ளங்காடு கிராமத்தில் இருந்து எடுத்துச் செல்வது தொடர்பாக இரு கிராம மக்களிடையே நேற்று தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் இன்று காலை தேவகோட்டை கோட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் முள்ளங்காடு கிராமத்திற்குச் சென்றனர்.
போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் மீட்பு
முள்ளங்காடு கிராமத்தில் உள்ள கோவிலில் பூட்டி வைக்கப்பட்டிருந்த 5 ஐம்பொன் உற்சவர் சிலைகளும் அதிகாரிகளால் மீட்கப்பட்டன. பின்னர் அந்த சிலைகள் புளியங்குடியிருப்பு கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலைகள் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட சம்பவத்தால் இரு கிராமங்களிலும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முள்ளங்காடு மற்றும் புளியங்குடியிருப்பு ஆகிய இரு கிராமங்களிலும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
“இந்துசமய அறநிலையத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும்”
இதற்கிடையே, முள்ளங்காடு கிராம மக்கள் தரப்பில், நீதிமன்றத்தில் தாங்கள் முறையிட்டுள்ளதாகவும், சிலைகளை ஒப்படைக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் அது ஏற்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், 5 ஐம்பொன் சிலைகளையும் இந்து சமய அறநிலையத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என தாங்கள் தெரிவித்திருந்த நிலையில், அவை தற்போது புளியங்குடியிருப்பு கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் முள்ளங்காடு கிராம மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
நூற்றாண்டு கால பாரம்பரிய வழிபாடு மற்றும் திருவிழாவுடன் தொடர்புடைய 5 ஐம்பொன் சிலைகள் தொடர்பாக இரு கிராம மக்களிடையே நீண்டகாலமாக நீடித்து வந்த பிரச்னை, நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தற்போது அதிகாரிகளின் தலையீட்டால் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. இரு கிராமங்களிலும் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
