கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 60-க்கும் மேற்பட்ட தூய்மைத் தொழிலாளர்கள் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கடுமையான விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஊதியம் சரிவர நேரத்திற்கு வழங்கப்படவில்லை, தூய்மைப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கையுறை, முகக்கவசம், பாதுகாப்பு உடை, காலணி போன்ற அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் கூடுதல் நேரம் வேலை வாங்கப்படுகிறது, ஆனால் அதற்கான ஊதியம் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர்கள், நகராட்சியின் தூய்மைப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வரும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் நகராட்சி மேற்பார்வையாளர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
