திருப்பூர் உடுமலை அருகே அந்தியூரில் திருமூர்த்தி அணையில் இருந்து 2-ம் மண்டலத்திற்கு உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
பிஏபி திட்டத்தின் மூலம் திருமூர்த்தி அணையிலிருந்து நான்கு மண்டலங்களாகப் பிரித்து சுமார் 3 லட்சத்து 77 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. ஒரு மண்டலத்திற்கு சுமார் 95 ஆயிரம் ஏக்கர் வீதம் பாசன வசதி கிடைத்து வருகிறது.
பிஏபி தொகுப்பு அணைகளில் போதிய தண்ணீர் இருப்பது வழக்கமாக, ஜூலை மாதத்திற்குள் கால்வாய் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டு, ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் 2-ம் மண்டலத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக திட்டக்குழுத் தலைவர், பகிர்மானக் குழுத் தலைவர்கள் மற்றும் பாசன சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட விவசாயிகள் பலமுறை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நேரில் கோரிக்கை மனுக்கள் வழங்கியும் காத்திருப்புப் போராட்டம் உள்ளிட்ட பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் தண்ணீர் திறக்கப்படவில்லை .
இந்த நிலையில் நேற்று திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் உடனே திறக்க கோரியும் , பாசன கால்வாய்களை தூர்வார வலியுறுத்தியும் , காய்ந்துபோன தென்னை மரங்களுக்கு தோட்டக்கலை துறை மூலமாக ஆய்வுகள் மேற்கொண்டு ஒரு இழப்பீடு வழங்க வேண்டும், மேலும் தண்ணீர் திறக்கப்படவில்லை என்றால் விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு குடும்பத்துடன் ஆடு மாடுகளுடன் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என விவசாயிகள் தெரிவித்தனர்
பொள்ளாச்சி திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள்
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் ஓரு மணிநேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடுமலை டிஎஸ்பி தையல்நாயகி வட்டாட்சியர் அருணா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
