Headlines

ஐஆர்எஸ் அதிகாரி ப்ரோபைல், பெண் குரல் : ஆண்களை ஏமாற்றிய ஆண் கைது

ஐஆர்எஸ் அதிகாரி ப்ரோபைல், பெண் குரல் : ஆண்களை ஏமாற்றிய ஆண் கைது

தமிழகம் முழுவதும் திருமண இணையதளங்கள் மூலமாக மோசடி செய்த ராம்குமார் பாண்டியன் என்பவரை, சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் கார்த்திக் என்பவரது புகாரின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இயல்பாகவே பெண் குரலில் பேசும் திறன் கொண்ட ராம்குமார் பாண்டியன், அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி திருமண இணையதளங்கள் மூலம் பல ஆண்களை ஏமாற்றி, சுமார் 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை தமிழகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட ஆண்கள் இவரால் ஏமாற்றப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் ஐ.ஆர்.எஸ் (IRS) பெண் அதிகாரி எனத் திருமண இணையதளங்களில் போலியாகப் பதிவு செய்துள்ளார். அதே நேரத்தில் இன்ஸ்டாகிராமில் இருந்து அழகான பெண்களின் புகைப்படங்களை எடுத்துப் பதிவிட்டு, பெண் தேடும் ஆண்களைக் குறிவைத்து இந்த மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனது தொலைபேசி எண் மற்றும் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தினால் போலீசாரிடம் மாட்டிக்கொள்வோம் என அஞ்சியுள்ளார். இதனால் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அவர், தனது சொந்த ஊர் பகுதிகளில் தான் ஒரு ஐ.ஆர்.எஸ் அதிகாரி மற்றும் அரசாங்க அதிகாரி எனக் கூறி வந்துள்ளார்.

அங்குள்ள ஓட்டுநர்களின் பெயர்களைப் பயன்படுத்தி சிம் கார்டுகளையும், வங்கிக் கணக்குகளையும் வாங்கி, அவற்றை புலனாய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்துவதாகக் கூறி திருமண இணையதளங்கள் மூலம் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவரிடம் ஏமாந்த பிற நபர்கள் யாரேனும் இருந்தால், அவர்கள் உடனடியாகப் புகார் அளிக்குமாறு சென்னை சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *