காரைக்குடி அருகே விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்த சம்பவத்தில், மருத்துவமனை நிர்வாகத்திடம் ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டியதாக வெளியான வீடியோ அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவங்கை மாவட்டம் அரியக்குடியைச் சேர்ந்த பரசுராமன் (42) மற்றும் இவரது மனைவி மீனாட்சி (32) ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் மானகிரி பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த பொலிரோ சரக்கு வாகனம் மோதிய விபத்தில், மீனாட்சிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார்.
காரைக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின் சிவகங்கை அரசு மருத்துவமனைக்குச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால், உறவினர்கள் அவரை காரைக்குடியில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றனர். இறுதியாக, சூடாமணிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த மீனாட்சி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மீனாட்சியின் உயிரிழப்பைத் தொடர்ந்து, சிலர் மருத்துவமனை நிர்வாகத்திடம் ரூ. 10 லட்சம் கேட்டுப் பேசியதாகவும், அத்தொகையைக் கொடுக்க மறுத்ததால் போராட்டம் அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
“பணம் கொடுத்திருந்தால் இந்தப் போராட்டத்தை அறிவித்திருக்க மாட்டோம்” என்று சிலர் பேசுவது அதில் பதிவாகியுள்ளது.
சில நபர்கள் திட்டமிட்டு தனியார் மருத்துவமனைகளை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக மருத்துவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்கு அச்சுறுத்தல் தரும் நபர்கள் மீது காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
