சிவகங்கை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி தண்டவாளத்தில் விழுந்த பூ வியாபாரியின் இரு கால்களும் ரயில் சக்கரத்தில் சிக்கி துண்டான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பயணிகள் ரயிலில், மானாமதுரை அருகே கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த பூ வியாபாரி பழனி தனது மகளை சந்திப்பதற்காக பயணம் மேற்கொண்டிருந்தார்.
ரயில் சிவகங்கை ரயில்வே நிலையத்தில் நின்றபோது அவர் கீழே இறங்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் ரயில் புறப்படத் தொடங்கிய நிலையில் மீண்டும் ஏற முயன்றபோது, எதிர்பாராத விதமாக கால்தவறி தண்டவாளத்தில் விழுந்தார். இதில் அவரது இரு கால்களின் மீது ரயிலின் சக்கரம் ஏறியதால், இரு கால்களும் கடுமையாக சேதமடைந்தன.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் உடனடியாக அவசர சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பழனிக்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த பரபரப்பான சம்பவத்தால் ராமேஸ்வரம் – திருச்சி பயணிகள் ரயில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
கண்முன்னே நடந்த இந்த விபத்தை பார்த்த பயணிகள் பலரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்தனர்.
இந்த சம்பவம் குறித்து மானாமதுரை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
