வேப்பூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்
ஒப்பந்ததாரரிடம் கமிஷன் தொகை கேட்பதாக கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வட்டார வளர்ச்சி அலுவலராக சித்தார்த் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் ஏற்கனவே பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய நிலையில், தற்போது பணி மாறுதலாகி வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதி, சட்டமன்ற உறுப்பினர் நிதி, நாடாளுமன்ற உறுப்பினர் நிதி மற்றும் ஊராட்சி ஒன்றிய பொது நிதி உள்ளிட்ட பல்வேறு நிதிகளின் கீழ் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள், பணி முடித்ததற்கான பில் தொகையை பெறுவதற்காக வட்டார வளர்ச்சி அலுவலரை அணுகும்போது, கமிஷன் தொகை வழங்கினால் மட்டுமே பில் தொடர்பான ஆவணங்களில் கையெழுத்திடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த் கடந்த காலத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக பேச்சுத் திறனை இழந்துள்ளதாகவும், அவர் பேசுவது எதிரில் இருப்பவர்களுக்கு தெளிவாக புரியாத நிலையில், அலுவலகத்தில் பணிபுரியும் சிலர் அவரது பேச்சை விளக்குவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, பணி முடித்த ஒப்பந்ததாரர் ஒருவர் பில் தொகைக்காக வட்டார வளர்ச்சி அலுவலரை அணுகியபோது, ரூ.6,500 வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டதாகவும், அந்த ஒப்பந்ததாரர் ரூ.4,500 மட்டுமே வழங்கிய நிலையில், மீதமுள்ள ரூ.2,000 வழங்க வேண்டும் என அவர் கையால் எழுதி வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை பதிவு செய்ததாக கூறப்படும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனால் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பில் தொகை பெறுவதற்கு கமிஷன் வசூலிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், பேச்சுத் திறன் தொடர்பான குறைபாட்டை அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் உடல்நிலையை விமர்சிப்பது சரியல்ல என்றாலும், பொதுமக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய முக்கிய பொறுப்பில், தேவையான நிர்வாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வைரலாகி வரும் வீடியோவின் உண்மைத் தன்மை மற்றும் அதில் கூறப்படும் கமிஷன் குற்றச்சாட்டு குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
