Headlines

18 ஆண்டுகள் ஓட்டிய அரசு பேருந்து : கண்ணீருடன் பிரியாவிடை அளித்த ஓட்டுநர்

18 ஆண்டுகள் ஓட்டிய அரசு பேருந்து : கண்ணீருடன் பிரியாவிடை அளித்த ஓட்டுநர்

பல ஆண்டுகளாக தன்னுடைய வாழ்வாதாரமாக இருந்த கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (KSRTC) பேருந்தை, 18 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு ஓய்வு பெற்ற ஓட்டுநர் ஒருவர் நெகிழ்ச்சியுடன் வணங்கி விடைபெற்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனையைச் சேர்ந்த பால் குரியன் என்பவர், கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 18 ஆண்டுகளாக ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார். இவர் குமுளி டிப்போவில் பணியாற்றி, குமுளி – கம்பம் வழித்தடத்தில் பேருந்தை இயக்கி வந்ததாக கூறப்படுகிறது.

பணிக்காலத்தின் இறுதிப் பயணத்தை முடித்த பின்னர், வழக்கம்போல் ஓட்டுநர் இருக்கையில் இருந்து இறங்கிய பால் குரியன், தான் 18 ஆண்டுகளாக ஓட்டிய பேருந்தின் அருகே சென்று நெகிழ்ச்சியுடன் நின்றார்.

பின்னர் பேருந்தைத் தொட்டு வணங்கிய அவர், அதன் சக்கரங்களைத் தொட்டு தலைவணங்கினார். தொடர்ந்து பேருந்துக்கு முத்தமிட்டு, தனது பணிக்காலத்தின் நினைவுகளுடன் கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தார்.

தனது வாழ்க்கையின் முக்கியமான காலகட்டத்தை இந்தப் பேருந்துடனும், ஓட்டுநர் பணியுடனும் கழித்த நிலையில், அதற்கு அவர் செலுத்திய மரியாதை காண்போரை நெகிழச் செய்தது.

இந்தக் காட்சிகளைப் பதிவு செய்தவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில், தற்போது அந்த வீடியோ வேகமாகப் பரவி வருகிறது.

பால் குரியனின் செயலைப் பார்த்த இணையவாசிகள், “வாகனம் என்றாலும், அது தனது வாழ்க்கையைத் தாங்கிய கருவி என்பதை உணர்ந்து அவர் செலுத்திய மரியாதை பாராட்டுக்குரியது” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் பாராட்டு

இந்த நெகிழ்ச்சியான பிரியாவிடை குறித்து கேரள முதல்வர் வி.டி. சதீசன் தனது சமூக வலைதளப் பதிவில் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில், பல ஆண்டுகளாக மிகுந்த பக்தியுடன் ஓட்டிய பேருந்திற்கு மரியாதையுடன் தலைவணங்கிய பால் குரியனின் நெகிழ்ச்சியான பிரியாவிடை தன்னை மிகவும் பாதித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பால் குரியனைப் போன்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் அயராத அர்ப்பணிப்பும் பெருமிதமும்தான் கேரளாவின் பொதுப் போக்குவரத்தின் உண்மையான முதுகெலும்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் உயிர்நாடியாக விளங்கும் கே.எஸ்.ஆர்.டி.சி.யை நவீனமயமாக்கவும், பாதுகாக்கவும், அதன் மதிப்பை உயர்த்தவும் அரசு உறுதியாக உள்ளது என்றும் முதல்வர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

18 ஆண்டுகளாக தன்னுடன் பயணித்த பேருந்துக்கு ஒரு தொழிலாளி செலுத்திய இந்த மரியாதை, வெறும் பிரியாவிடை நிகழ்வாக இல்லாமல், தனது தொழிலையும் அதனுடன் இணைந்த வாழ்க்கையையும் மதிக்கும் ஒரு மனிதரின் உணர்வுப்பூர்வமான வெளிப்பாடாக மாறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *