மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடையில்லை எனக்கூறி வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்தது. இரு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கியது. இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. இந்த 2 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகி ராஜினாமா செய்தவர்கள் தற்போது தவெக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில், மக்கள் தீர்ப்பை புறக்கணித்து அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால், இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் செலவை டெபாசிட் செய்யும் வகையில் உரிய நடைமுறையை வகுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கின் விசாரணை இரு நீதிபதிகளின் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இரு தொகுதி எம்எல்ஏக்களின் ராஜினாமா கேலி கூத்தானது என கருத்து தெரிவித்த நீதிபதிகள்,
குறுகிய காலத்தில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவது கேலிக்கூத்தானது; வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல் எனவும் தெரிவித்தனர்.
மேலும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடையில்லை எனக்கூறி வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
