Headlines

கண்மாயில் கொல்லப்பட்ட இருவர் : குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் தீவிரம்

கண்மாயில் கொல்லப்பட்ட இருவர் : குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் தீவிரம்

சிவகங்கை பழமலைநகர் அருகே உள்ள கொடிக்காடு கிராம கண்மாயில் இருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை நகர் காவல் நிலையத்திற்கு, கொடிக்காடு கிராமத்தில் உள்ள கண்மாயில் இருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சுமார் 35 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண்கள் பலத்த வெட்டுக்காயங்களுடன் முகங்கள் சிதைந்த நிலையில் உயிரிழந்து கிடப்பதை கண்டறிந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவரையும் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சம்பவ இடத்தின் அருகே பதிவு எண் பொருத்தப்படாத புதிய வெள்ளை நிற கார் ஒன்று கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதமடைந்த நிலையில் நின்றிருந்ததையும் போலீசார் கவனத்தில் கொண்டு விசாரித்தனர்.

தகவலறிந்து உயரதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. உயிரிழந்தவர்கள் யார், அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள், கொலைக்கான காரணம் என்ன, இதில் தொடர்புடையவர்கள் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் அதிகம் நடமாடாத பகுதியில் இருவர் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை விரைவில் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *