திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், ஆத்துவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்டு–லெனினிஸ்டு) கட்சியின் மாவட்ட குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.
இவருக்கும், பக்கத்து நிலத்தைச் சேர்ந்தவருக்கும் நீண்ட காலமாக நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வெங்கடேசன் கடந்த ஆகஸ்டு 11-ந் தேதி சந்தவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக தெரிகிறது.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய விசாரணை நடத்தாமல் இருதரப்பினரையும் அழைத்து சமரசம் பேசி பிரச்சினையை முடித்ததாகவும், இதனால் எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று காலை 9 மணியளவில் அத்திமூர் மருத்துவமனையில் இருந்து ஆத்துவாம்பாடி கிராமத்திற்கு வெங்கடேசன் சென்று கொண்டிருந்தார். அப்போது 10-க்கும் மேற்பட்டோர் அவரை வழிமறித்து கத்தியால் வெட்டியும், கற்களால் தாக்கியும் சென்றதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த வெங்கடேசன் ரத்தம் சொட்ட சொட்ட ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்டு மார்க்சிஸ்டு–லெனினிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கூறுகையில், சந்தவாசல் காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தாமல் சமரசம் செய்து முடிப்பதாகவும், இந்த விவகாரத்திலும் உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவே வெங்கடேசன் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், சம்பவம் தொடர்பாக தற்போது 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 பேரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வெங்கடேசன் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். சம்பவம் தொடர்பாக தமிழக அரசும், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆறுமுகம் கோரிக்கை விடுத்தார்.
