தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவலில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்க முடியாத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவுவதாகக் கூறிய அவர், 25 முதல் 30 நாட்கள் வரை தண்ணீர் திறந்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்பது விவசாய சங்கங்களின் கருத்தாக உள்ளது என்றார்.
விவசாயிகள், உளவுத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கருத்துகளை கேட்டறிந்து தண்ணீர் திறக்க முடிவு செய்திருக்கலாம் என்றும், தற்போதைய தண்ணீர் திறப்பு விவசாயிகளுக்கு எந்தப் பயனையும் அளிக்காது என்றும் தெரிவித்தார்.

மேலும், “தற்குறிகளின் ரீல்ஸ் கன்டென்ட்டுக்கு மட்டுமே இந்த தண்ணீர் திறப்பு உதவும்; விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை” என டிடிவி தினகரன் விமர்சித்தார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன், “விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்தாலும், அந்தப் பழக்க தோஷம் இன்னும் போகவில்லை” என்றார்.
வீட்டில் இருந்து புறப்பட்டு மீண்டும் வீடு திரும்பும் வரை ஷூட்டிங் நடப்பது போல் விஜய் செயல்படுவதாகவும், அவர்களைப் பொறுத்தவரை அனைத்தும் ரீல் கன்டென்ட்டாகவே பார்க்கப்படுகிறது என்றும் விமர்சித்தார்.
“விஜய் சினிமாவில் பிரபலம், கவர்ச்சி என்றால் கோபித்துக் கொள்வார்; அதுதான் உண்மை. அவர் வேறு என்ன சுதந்திரப் போராட்ட வீரரா? கப்பலோட்டிய தமிழனா?” எனவும் கேள்வி எழுப்பினார்.
சினிமா ஹீரோ என்பதால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் அவரைத் தேர்வு செய்துள்ளதாகவும், ஆனால் ஆட்சியாளர்களிடம் எந்தத் திட்டமும் இல்லை என்றும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.
“தமிழக ஆட்சி ஒரு கேலிக்கூத்து”
தமிழக அமைச்சர்களால் தாய்மொழியான தமிழைக்கூட ஒழுங்காகப் பேச முடியவில்லை எனக் கூறிய அவர், இது வருத்தமாகவும் வெட்கக்கேடாகவும் இருப்பதாக விமர்சித்தார்.
தமிழக நிதி அமைச்சர் மதத்தின் பெயரில் புரளியை கிளப்புவதாகவும், “தமிழும் வரவில்லை, கணக்கு வழக்கும் வரவில்லை” என்றும் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்தார்.
மேலும், முதலமைச்சர் பேச வேண்டிய இடங்களில் பேசுவார்கள் என கூறப்படுவதாகவும், “முதலமைச்சரிடம் சரக்கு இல்லை; கேள்விகளுக்கு பதில் சொல்லும் அளவுக்கு விஷயம் இல்லை” என்றும் அவர் விமர்சனம் செய்தார்.
சினிமா என்பது கற்பனை என்றும், திரைப்படத்திற்காக உருவாக்கப்படும் கதைகளைப் போன்று அரசியலிலும் மாயையை உருவாக்கி ஆட்சிக்கு வந்துவிட்டு மக்களை ஏமாற்றும் வேலை நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டிய டிடிவி தினகரன், “இந்த ஆட்சி ஒரு கேலிக்கூத்தாக இருக்கிறது” என்றார்.
“தமிழ்நாட்டைப் பிடித்த சாபக்கேடாக இந்த ஆட்சி உள்ளது”
இயற்கையான சூழல் அமையும் என கூறிய அமைச்சர் நிர்மல் குமார் குறித்த கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எந்தக் கட்சியில் இருந்தார் என்பது அவருக்கே தெரியாது என்றும், லாட்டரி விழுந்தது போல் அமைச்சராகிவிட்டார் என்றும் விமர்சித்தார்.
“இந்த ஆட்சியைப் பற்றி பேசியே தொண்டை வறண்டு விட்டது. ஏப்ரல், மே மாதங்களில் அடிப்பது போல் இப்போதும் வெயில் அடிக்கிறது. தமிழ்நாட்டைப் பிடித்த சாபக்கேடாக இந்த ஆட்சி இருக்கிறது” என அவர் தெரிவித்தார்.
இந்த ஆட்சிக்கு வாக்களித்தவர்கள் தற்போது உணரத் தொடங்கிவிட்டதாகவும், தமக்கு வரும் தகவல்களும் அதையே உறுதிப்படுத்துவதாகவும் கூறிய அவர், “இந்த மாயை ஒரு முடிவுக்கு வரும்” என்றார்.
மேலும், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் சுமார் 60 ஆண்டுகள் ஆட்சி செய்த நிலையில், மாற்றத்தை எதிர்பார்த்த மக்கள் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரித்ததாகவும், அந்த ஆதரவு திமுக மீது ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக உருவானதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
