சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நெல் கட்டும் செவலில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், தமிழக சட்டமன்றத்தில் எம்எல்ஏக்கள் மக்கள் பிரச்சினைகளை பேசவில்லை என்ற விமர்சனம் குறித்து பதிலளித்தார்.
தமிழக சட்டமன்றத்தை நேரலை செய்வது பாராட்டுக்குரிய விஷயம் என்றும், இதற்கு மிகப்பெரிய தைரியமும், சபாநாயகரின் பெருந்தன்மையும் தேவை என்றும் கூறினார்.
சட்டமன்றம் நடுநிலையோடு செயல்படுவது மிகவும் முக்கியம் எனவும் தெரிவித்தார்.
டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினாலும் அவரை காட்டுவதில்லை என்றும் விமர்சித்தார்.
தமிழக சட்டமன்றத்தில் சிலர் சொந்த பிரச்சினைகளை பேசுவதும், ரீல்ஸ் வருவதற்காக சில விஷயங்கள் நடப்பதும் உண்மைதான் என்றாலும், காலப்போக்கில் அது சரியாகிவிடும் என தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி உள்ளிட்டோர் சட்டமன்றத்தில் அமர்வது சபைக்கு மிகவும் முக்கியமானது என்றும், தமிழக சட்டமன்றத்தில் ஜீவாதார பிரச்சினைகள் மற்றும் மாநில உரிமைகள் குறித்து பேசப்படுவதாகவும் கூறினார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பேச விடுவதில்லை; ஜனநாயகம் இல்லாத ஒரு நாடாளுமன்றமாக உள்ளது என்றும், தமிழகத்தில் ஜனநாயகத்துடன் சட்டமன்றம் நடைபெறுகிறது என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
“ஊடகத்தின் அடுத்த பரிமாண வளர்ச்சிதான் ரீல்ஸ்”
ரீல்ஸை கேவலமாக நினைக்கக் கூடாது என தெரிவித்த அவர் ஒரு காலத்தில் நாடகங்கள், பின்னர் சினிமா என ஊடகங்கள் வளர்ந்ததை சுட்டிக்காட்டினார். தற்போது 30 விநாடிகளுக்கு மேல் கவனம் செலுத்தும் பழக்கம் குறைந்து வருவதால், சுருக்கமாக சொல்லும் பழக்கத்தை ரீல்ஸ் உருவாக்கியுள்ளது என்றும், ஊடகத்தின் அடுத்த பரிமாண வளர்ச்சியாக ரீல்ஸை பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.
விஜய் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றார்.
விஜய் தமிழக முதலமைச்சராக தொடர்ந்து நல்லாட்சி வழங்க வேண்டும் என்றும், ஊழலற்ற ஆட்சியை தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் கூறிய அவர் காங்கிரஸ் கட்சி விஜயுடன் இருப்பதாக தெரிவித்தார்.
“விஜய்க்கும் ராகுல் காந்திக்கும் காங்கிரஸ் பலமாக இருக்கிறது. பல வேளைகளில் நரி தந்திரங்கள் நடைபெறுகின்றன. அந்த நரி தந்திரங்களில் சிக்காமல் இருப்போம். எங்களைப் பொறுத்தவரை விஜய் அரசு பலமாக உள்ளது. தமிழகத்திற்கு நல்லது நடக்கும்” என்றார்.
சமூக நீதிக்கான அரசாக தமிழக அரசு செயல்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தெளிவாக இருப்பதாகவும், ராகுல் காந்தியும் அதே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
முதலமைச்சருடனான நேற்று நடைபெற்ற சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை என்றும் மாணிக்கம் தாகூர் விளக்கம் அளித்தார்.
விஜய் பிரதமர் வேட்பாளர் விவகாரம் சர்ச்சையாக உள்ள நிலையில் முதலமைச்சரை சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பியபோது, சிலர் நரி தந்திரம் செய்து வருவதாக விமர்சித்தார்.
“நரி மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படும். யாருடைய உழைப்பையாவது தட்டிச்சென்று விடலாம் என நினைப்பதுதான் நரி தந்திரம். இதுபோன்ற செயல்களை சிலர் செய்கின்றனர். இது ஒரு உறவை கெடுக்கும் செயல். இந்த தந்திரங்கள் அனைத்தும் தோற்கடிக்கப்படும்” என்றார்.
பாராளுமன்றத்தில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது முதல் சுதந்திரப் போராட்ட வீரர் சிலையை அமைப்பதற்கான முயற்சியை காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும்
பாஜகவிற்கு காங்கிரஸ் எப்போதும் எதிரான கட்சி என்றும், தங்களை நம்பி வந்தவர்களுக்கு உயிரையே கொடுப்பதுதான் காங்கிரஸ் கட்சியின் குணம் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
