பேரணாம்பட்டு அருகே ஆபரண கற்கள் வியாபாரியிடம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 8 அலெக்ஸாண்டர் கற்களை மர்ம கும்பல் கொள்ளையடித்த சம்பவத்தில் 24 மணி நேரத்தில் போலீசார் ஒரு குற்றவாளியை கைது செய்து 7 அலெக்சாண்டர் கற்கள் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பல்லலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த உயர் ரக கற்கள் விற்பனை செய்யும் வியாபாரி ஆனந்தகுமார் (58).
பேரணாம்பட்டு அடுத்த ஏரிகுத்தி பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் ஆனந்த குமாரிடம் உயர கற்கள் வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் உயர்ரக கற்கள் விற்பனை செய்யும் வியாபாரி ஆனந்தகுமார், என்னிடம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அலெக்சாண்டர் கற்கள் இருப்பதாகவும் அதனை விற்பனை செய்ய வேண்டும் என்றும், யாராவது அதனை வாங்குவதற்கு ஆள் இருந்தால் சொல்லும்படி புருஷோத்தமனிடம் ஆனந்தகுமார் கூறியுள்ளார்.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள உயர்ரக அலெக்சாண்டர் கற்கள் இருப்பதை தெரிந்து கொண்ட புருஷோத்தமன் பேரணாம்பட்டு கோட்டைச்சேரி பகுதியை சேர்ந்த ராகுல் மற்றும் சபரி ஆகியோருடன் சேர்ந்து ஆனந்தகுமாரிடம் இருக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அலெக்சாண்டர் கற்களை கொள்ளை அடிக்க திட்டம் தீட்டி உள்ளார்.
ஆனந்தகுமார் பேரணாம்பட்டில் இருந்து பல்லலகுப்பம் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அலெக்சாண்டர் கற்களை பையில் எடுத்துக் கொண்டு வரும்போது, புருஷோத்தமன் ஆனந்த குமாருக்கு போன் செய்து கொண்டே அவர் வரும் இடத்தை விசாரித்து வந்துள்ளார்.
ஆள் நடமாட்டம் யாரும் இல்லாத இடத்தை தேர்வு செய்து ஆனந்தகுமார் இருசக்கர வாகனத்தில் வரும் போது அவரை வழிமறித்து அவர் கொண்டு வந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள அலெக்சாண்டர் கற்கள் கொண்ட பையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். உடனடியாக அருகே இருக்கும் மேல்பட்டி காவல்துறையினருக்கு ஆனந்தகுமார் புகார் அளித்ததை தொடர்ந்து பேரணாம்பட்டு காவல் ஆய்வாளர் பிரபு தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வியாபாரி ஆனந்த குமாருக்கு தொடர்ந்து போன் செய்த புருஷோத்தமன் மீது சந்தேகம் ஏற்பட்டு பேரணாம்பட்டு காவல் ஆய்வாளர் பிரபு தலைமையிலான போலீசார் இன்று காலை புருஷோத்தமன் வீட்டிற்கு சென்று அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் ஆனந்த குமாரிடம் இருந்து அலெக்சாண்டர் கற்களை மூன்று பேர் சேர்ந்து கொள்ளையடித்தது உறுதியானது. மேலும் 7 அலெக்சாண்டர் கற்கள் புருஷோத்தமன்னிடமிருந்து பறிமுதல் செய்தனர். மேலும் ஒரு அலெக்சாண்டர் கல்லை எடுத்துகொண்டு தலைமறைவான பேரணாம்பட்டு கோட்டைச்சேரி பகுதியை சேர்ந்த ராகுல் மற்றும் சபரி இருவரையும் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட ஏழு அலெக்சாண்டர் கற்கள் பரிசோதனைக்குப் பிறகு உண்மையான அலெக்சாண்டர் கற்களா அது அல்லது போலியான கற்களா என தெரியவரும் என தெரிவித்தனர்.
