கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கல்லாவி, தாதுநாயக்கன்பட்டி கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தாய் மற்றும் பாட்டியை போலீசார் கைது செய்தனர்.
சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கொலை செய்யப்பட்டவர் அருண்குமார் (32). இவரது தாய் கிருஷ்ணவேணி. இவர் கணவரை பிரிந்து, கடந்த 20 ஆண்டுகளாக தஞ்சாவூரில் பானிபூரி கடை நடத்தி வந்துள்ளார். மகன் அருண்குமாருடன் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இருவரும் திருச்செங்கோடு சென்று அங்கு பானிபூரி கடை நடத்தியுள்ளனர். அப்போது தாய், மகனுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், வீட்டு உரிமையாளர் அவர்களை வெளியேற்றி உள்ளார்.
இதையடுத்து கடந்த மாதம் 24-ம் தேதி சொந்த ஊரான தாதுநாயக்கன்பட்டிக்கு வந்த இருவரும், அருண்குமாரின் பெரியப்பா கோவிந்தன் வீட்டில் தங்கியிருந்தனர்.
அருண்குமார் தனது தாயிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 1-ம் தேதி அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அருண்குமாரை, அவரது தாய் கிருஷ்ணவேணி மற்றும் பாட்டி ராணியம்மாள் ஆகிய இருவரும் சேர்ந்து கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து கல்லாவி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்திருந்தனர். கடந்த 13-ம் தேதி வெளியான உடற்கூராய்வு அறிக்கையில், கழுத்து நெரிக்கப்பட்டதால் அருண்குமார் மூச்சுத் திணறி உயிரிழந்தது உறுதியானது.
இதையடுத்து கிருஷ்ணவேணி மற்றும் ராணியம்மாளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். முதலில் முன்னுக்குப்பின் முரணாக பேசிய இருவரும், பின்னர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து கல்லாவி போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்டிருந்த சந்தேக மரண வழக்கு (குற்ற எண் 144/2026), BNS 103(1) கொலை வழக்காக மாற்றப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பெற்ற மகனையே தாய் கொலை செய்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
