தென்காசி வேட்டைக்காரன்குளம் அருகே அரசு பேருந்து ஆற்று பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு 1- டூ-1 விரைவு அரசு பேருந்து சென்றது. பேருந்தை ஓட்டுநர் சிவசக்தியும், நடத்துநர் இசக்கிமுத்துவும் பணியில் இருந்தனர்.
வேட்டைக்காரன்குளம் அருகே ஆத்து பாலத்தில் சென்றபோது, எதிர்பாராத விதமாக பேருந்து நிலைதடுமாறி பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சுமார் 10 அடி ஆழத்தில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தை பார்த்த பொதுமக்கள் உடனடியாக குற்றாலம் போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
காயமடைந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டு, தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படாத நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
விபத்து குறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
