சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் மரபு மற்றும் விதிமுறைகளை மீறி பேசியதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், “சட்டப்பேரவையில் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் இருக்கும்போது, அவற்றைப் பற்றி பேசாமல் பழைய சர்க்காரியா, மிசா போன்ற விவகாரங்களை முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்” என விமர்சித்தார்.
மிசா காலத்தில் தாம் ஓராண்டு சிறையில் இருந்ததாகக் கூறிய துரைமுருகன், அப்போது ஸ்டாலினை காப்பாற்றுவதற்காக சிட்டிபாபு தாக்குதலை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார். “தியாகம் செய்தவர்களுக்குத்தான் தியாகத்தின் அருமை தெரியும்” என்றும் அவர் கூறினார்.
சட்டப்பேரவை விதிகளின்படி, அவையில் உள்ள உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு கூறுவதற்கு முன் சபாநாயகரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் துரைமுருகன் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் சபாநாயகர் தவறிவிட்டதாகவும், விதிகளை மீறியதற்காக முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தலாம் என்றும் கூறினார்.
புதிய தலைமைச் செயலக விவகாரம்
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாகவும் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
“பட்டினப்பாக்கத்தில் போதிய சாலை வசதிகள் இல்லை; ஒரே ஒரு முக்கிய சாலை இருப்பதால் தலைமைச் செயலகம் அமைந்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்” என்றார்.
மேலும், ₹1,200 கோடியில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கு பதிலாக மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு கூடுதல் நிதியை செலவிடலாம் என்றும் விமர்சித்தார்.
முதல்வர் விஜய் லண்டன் பயணம்
முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் தொடர்பாக பேசிய துரைமுருகன், “லண்டனில் இருந்து தொழில் முதலீட்டை கொண்டு வருவதாக கூறுகிறார்கள். அவர் அங்கிருந்து எவ்வளவு முதலீட்டை கொண்டு வருகிறார் என்று பார்ப்போம். முதலீட்டை கொண்டு வந்து காட்டட்டும்; நான் சவால் விடுகிறேன்” என்றார்.
இரண்டு தொகுதி இடைத்தேர்தல்களிலும் திமுக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்த அவர், தவெக தலைமையிலான கூட்டணிக்கு பெயர் வைத்தது குறித்து, “பெற்ற பிள்ளைக்கு அவரே பெயர் வைக்கிறார்; அதற்கு நாம் என்ன செய்ய முடியும்” எனக் கூறினார்.
பல வழக்குகளை பார்த்தவர்கள் நாங்கள்
கே.என்.நேரு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் தொடர்பான சோதனைகள் குறித்து பேசிய அவர், அவை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் என குற்றம்சாட்டினார்.
“எங்கள் பெயர்களும் பட்டியலில் இருப்பதாக சொல்கிறார்கள். வரட்டும், பார்த்துக்கொள்வோம். அரசியலில் பல வழக்குகளை பார்த்தவர்கள் நாங்கள்” என துரைமுருகன் தெரிவித்தார்.
சாலமன் பாப்பையா மறைவுக்கு இரங்கல்
மறைந்த பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு தமிழ்நாடு அரசு மரியாதை செலுத்துவதை வரவேற்பதாக துரைமுருகன் தெரிவித்தார்.
“எளிய தமிழில், நகைச்சுவையுடன் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் பட்டிமன்றங்களை நடத்தியவர் சாலமன் பாப்பையா. உலகின் பல நாடுகளுக்கும் பட்டிமன்றத்தை கொண்டு சென்ற பெருமை அவருக்கு உண்டு. பட்டிமன்றம் என்றால் பாப்பையாதான். அவரது புகழ் என்றும் நிலைத்து நிற்கும்” என துரைமுருகன் இரங்கல் தெரிவித்தார்.
