Headlines

அடுத்தடுத்த வனத்துறை கைதுகள் : வேட்டை கும்பல் நடமாட்டம் ?

அடுத்தடுத்த வனத்துறை கைதுகள் : வேட்டை கும்பல் நடமாட்டம் ?

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆனைமலைப் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அமராவதி வனச்சரகத்தில், அடுத்தடுத்து அரங்கேறி வரும் யானை மரணங்கள் மற்றும் தந்தங்கள் கடத்தல் சம்பவங்கள் பெரும் சந்தேகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.

கடந்த மாதம் 18-ஆம் தேதி இப்பகுதியில் 40 வயது மதிக்கத்தக்கப் பெண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்தது. அதன் அருகிலேயே ஆறு மாத குட்டி யானை ஒன்றும் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இறந்த அந்தப் பெண் யானையின் கோரைப்பல் காணாமல் போயிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த 9-ஆம் தேதி அமராவதி நகரில் இரண்டு யானைத் தந்தங்களை விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்த வனக் காவலர் மாரியப்பன் உட்பட 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது பெண் யானையின் கோரைப்பல்லை விற்க முயன்ற மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன உயிரினக் குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவு (WCCB) மற்றும் வனத்துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அமராவதி நகர் பாறை செட்டில்மெண்ட்டைச் சேர்ந்த சூர்யா என்பவரைப் பிடித்து விசாரித்தனர். அவரது செல்போனில் இருந்த கோரைப்பல் புகைப்படத்தை வைத்து விசாரித்ததில், தளிஞ்சி செட்டில்மெண்ட்டைச் சேர்ந்த கருப்புசாமி என்பவர் இதனைக் கொடுத்தது அம்பலமானது. கருப்புசாமியைப் பிடித்து விசாரித்தபோது, வனப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யானையிடமிருந்து கோரைப்பல்லை எடுத்துப் பாறை இடுக்கில் மறைத்து வைத்திருந்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, பாறை இடுக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோரைப்பல் மற்றும் வனப்பகுதியில் சிதறிக் கிடந்த யானையின் எலும்புகளுக்கு அருகிலிருந்த மற்றொரு கோரைப்பல் என இரண்டையும் மீட்டனர். யானைத் தந்தம், மான் கொம்பு, சந்தனக்கட்டை போன்றவற்றை விற்றுப் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்ட சூர்யா மற்றும் கருப்புசாமி ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையிலடைத்தனர்.

பெண் யானை மற்றும் குட்டி யானை மர்ம மரணம், அதிலிருந்த கோரைப்பல் மாயம், வனக் காவலர் உட்பட அடுத்தடுத்து 5 பேர் தந்தம் கடத்தல் வழக்கில் கைது போன்ற தொடர் சம்பவங்கள், அமராவதி வனப்பகுதியில் யானைகள் தொடர்ந்து வேட்டையாடப்படுகிறதா என்ற பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன. இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *