தருமபுரியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்த பின் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பயிற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து வகையான குறைபாடுகளை கொண்ட மாற்றுத்திறனாளிகளும் அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்கும் வகையில் ஊக்குவிக்க வேண்டும் என அனைத்து அமைச்சர்களிடமும் கோரிக்கை வைத்துள்ளேன்.
தனியார் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றி வரும் உடற்கல்வி ஆசிரியர்கள் அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. இதுதொடர்பாக அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளேன், அவர்கள் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு அதிகளவில் நடைபெற்று வருகிறது. ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளது குறித்த கேள்விக்கு, கூட்டுறவு சங்கங்கள் கால்நடை வளர்ப்போருக்கு கூடுதல் கவனம் செலுத்தி பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதில் விவசாயிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதுதொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் கோரிக்கை வைத்துள்ளேன். இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான மாணவர்கள் இங்கு வந்து விளையாடி வருகின்றனர். அவர்களுக்கு தேவையான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன், அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
தருமபுரி பழைய பேருந்து நிலையம் மீண்டும் செயல்படுவதில் பிரச்சினை ஏற்பட்டால் மக்கள் நலனுக்காக தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி நாடும்.
தருமபுரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான காவிரி உபரி நீர் திட்டம், சிப்காட் திட்டங்களுக்கு தமிழக அரசு விரைந்து நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும். இதற்கான நிதியை ஒதுக்கி திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக அமைச்சர்கள் திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இத்திட்டங்கள் குறித்த அறிவிப்பை அரசு விரைவில் வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
