தருமபுரி மாவட்டம் அரூரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து முனை போட்டி நிலவுகிறது. வேட்பாளர்களை அந்தந்த கட்சிகள் அறிவித்துள்ளன. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனது மாநில, மாவட்ட தலைவர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து பேசி உரிய நேரத்தில் முடிவை அறிவிக்கும்.
தருமபுரி மாவட்டம் மிக முக்கியமான மாவட்டங்களில் ஒன்று. இந்த மாவட்டத்தில் 90 சதவீத பகுதிகள் மழை மறைவு பகுதிகளாக உள்ளன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இது உண்மையிலேயே வறட்சி மாவட்டம்தான். எனவே தருமபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கோரிக்கை வைக்கிறது.
மேலும் இம்மாவட்டத்தில் 90 சதவீத விவசாயம் கிணற்று பாசனத்தையே நம்பி உள்ளது. கிணறுகளின் நீர்மட்டம் சுமார் 1000 அடிக்கு சென்றுள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் அரசு செலவில் காவிரி மற்றும் தென்பெண்ணை ஆற்றிலிருந்து நீரேற்றம் செய்ய வேண்டும்.
வாணியம்பாடி – சேலம் தேசிய நெடுஞ்சாலை 179A-ல் மாஞ்சாவடியிலிருந்து சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் வரை சுமார் 25 கி.மீ. தூரம் ஒற்றைச் சாலையாக உள்ளது. இந்த 25 கி.மீ. தூரத்தை கடக்க ஒரு மணி நேரமாகிறது. அயோத்தியாபட்டினத்தில் ரயில்வே மேம்பாலம் இல்லை. எனவே இதை விரிவுபடுத்த வேண்டும்.
திருவண்ணாமலை – தருமபுரி மாநில நெடுஞ்சாலையில் அரூர் முதல் தீர்த்தமலை வரையிலான சாலை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதை ஒரு காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும்.
அரூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. தலைமையிடத்திலிருந்து அரூர் சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ளதால் பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று வர சிரமப்படுகின்றனர்.
தருமபுரியில் பேருந்து நிலைய பிரச்சனை நீண்ட நாள் பிரச்சனையாக உள்ளது. பழைய இடத்திலேயே பேருந்து நிலையம் இருக்க வேண்டும். புதிய இடத்திற்கு மாற்றினால் அரசுக்கு வருவாய் இழப்பு, மக்களுக்கு சிரமம்.
விவசாயிகளுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தாலும், அவர்களின் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
சமீபகாலமாக அரசியல் பொதுமேடைகளில் கண்ணியக் குறைவான பேச்சுக்கள், தனிமனித தாக்குதல், ஆபாச பேச்சுக்கள் அதிகரித்து வருவது நமது கலாச்சாரத்திற்கு ஏற்புடையதல்ல.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது, 9 பேர் உயிரிழந்துள்ளதாக செய்தி வருகிறது. சுகாதாரத்துறை தனது பணிகளை விரைவுபடுத்த வேண்டும்*
ரூ.2,000-க்கு மேல் பரிவர்த்தனை செய்யும் நிதி நிறுவனங்களுக்கு 0.4 சதவீத கட்டணம் அக்டோபர் 15 முதல் என்ற தேசிய பண பரிவர்த்தனை கழக அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்.
UPI பண பரிவர்த்தனை கட்டணம் சிறு, குறு வியாபாரிகளை பாதிக்கிறது. ரூ.75,000-க்கு ரூ.300-ம், அத்தியாவசிய துறைக்கு ரூ.5-ம் வசூலிக்கப்படுகிறது. இது ஏழை, எளிய மக்களை பாதிக்கும், மத்திய அரசின் டிஜிட்டல் திட்டத்திற்கு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே UPI கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ஏழை, எளிய மக்களுக்கு அவசியம். அதை காலக்கெடுவுக்குள் கட்டி முடிக்க வேண்டும்.
முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மூலம் ரூ.12,000 கோடி தொழில் முதலீடு, ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு என்ற செய்தி வரவேற்கத்தக்கது. இது காலக்கெடுவுக்குள் பயனுக்கு வர வேண்டும், இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்*
மயிலாடுதுறை அருகே வங்கக்கடலில் 5 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அமெரிக்காவை சேர்ந்த ஹார்டி நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது. அனுமதித்தால் டெல்டா விவசாயிகள், மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே அனுமதி மறுத்து நிரந்தர தடை விதிக்க வேண்டும்.
திருச்சியில் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு கனிவோடு பரிசீலிக்க வேண்டும்.
சட்டப்பேரவையில் சபாநாயகரின் செயல்பாடு நடுநிலையாக, கண்டிப்பும் கனிவும் கலந்ததாக உள்ளது. அவை விதிகளை முறையாக பின்பற்றுகிறார்.
சமீப வருடங்களில் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சிக்கு அதிக வாய்ப்பளித்த சபாநாயகர் இவர்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
