வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிளித்தான் பட்டறை பகுதியில் வீடுகளின் பின்புறம் பட்டியில் கட்டி வைக்கப்பட்ட ஆடுகள் தொடர்ந்து
திருடப்பட்டு வந்தன.ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்கள் யார் என அப்பகுதி பொதுமக்கள் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நள்ளிரவில் ஊருக்குள் இருசக்கர வாகனத்தில் கருப்பு நிற மாஸ்க் அணிந்து இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர்.
அவர்கள் ஆடுகள் எந்த வீட்டில் கட்டப்பட்டுள்ளது என நோட்டம் விட்டுக் கொண்டிருந்தபோது அதை கண்ட பொதுமக்கள் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் அந்த இளைஞர்கள் தப்ப முயன்றனர்.
அவர்களை விடாமல் துரத்தினர்அப்போது வாகனம் நிலைத்தடுமாறி கீழே விழுந்தது. ஒரு இளைஞர்
தப்பி ஓடிவிட, மற்றொரு இளைஞரை மடக்கிப்பிடித்தனர்.
பிடிபட்ட இளைஞர் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து கைகளை கட்டி அமர வைத்து காட்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அங்கு வந்த காவல்துறையினர் இளைஞரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஆடு திருட வந்த இளைஞர் பெயர் கணேஷ் (23) என்பதும் அவர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பகுதியை சேர்ந்தவர் என்பதும் வேலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் செவிலியர் கல்லூரியில் படித்து வருவதாகவும் தெரியவந்தது.
மேலும் போலீசார் தப்பி ஓடிய மற்றொரு இளைஞரை தேடி வருகின்றனர்.
நள்ளிரவில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் கிளித்தான்பட்டறை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
