சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே 24 வயது இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்த அழகப்பன் என்பவரது மகன் மாயக்கண்ணன் என்ற இளைஞர் ஜேசிபி ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார்.
இவர் பணி நிமித்தமாக கீழடி பள்ளிச்சந்தை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, இருசக்கர வாகனங்களை வந்த எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து விரட்டி சென்று அரிவாளால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே மாயக்கண்ணன் உயிரிழந்தார்.

தாக்குதல் நடத்திய கும்பல் தப்பியோடிய நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கீழடி காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இதே பகுதியில் ஏற்கனவே ஒரு கொலை சம்பவம் நடந்திருந்த நிலையில், மீண்டும் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து, கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் துணை கண்காணிப்பாளர் லோகநாதன் தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெறும் கொலை சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
