திருச்செந்தூர் அருகே கடைகளில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்களை தடுக்க முயன்ற உதவி ஆய்வாளரை கீழே தள்ளிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூரை சேர்ந்த ஜான் மகன் ராகேஷ் மற்றும் அந்தோனி மகன் எமர்சன் ஆகிய இருவரும் ஆத்தூர் பஜார் பகுதியில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையூறாக தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பொன் முனியசாமி, தகராறில் ஈடுபட்ட இருவரையும் தடுத்து நிறுத்த முயன்றார். அப்போது இருவரும் சேர்ந்து உதவி ஆய்வாளர் பொன் முனியசாமியை கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.
இதில் உதவி ஆய்வாளரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து ராகேஷ் மற்றும் எமர்சன் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பியோடினர்.
காயமடைந்த உதவி ஆய்வாளர் பொன் முனியசாமியை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உதவி ஆய்வாளரை கீழே தள்ளிவிட்டு தப்பியோடிய ராகேஷ் மற்றும் எமர்சன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் ஆத்தூர் பஜார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த காட்சிகள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
