தனது தாயின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மகன் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை மேலப்பாளையம் சர்க்கார் கிணறு தெருவை சேர்ந்த துரைசாமியின் மகன் தீனதயாளன் (29). இவர் ஈரோடு மாவட்ட. காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
எம்பிஏ பட்டம் பெற்ற இவர்,
திரைத்துறையில் ஆடை வடிவமைப்பாளராகவும், கிரியேட்டராகவும் பணியாற்றி வந்ததாகவும், தந்தை இறந்த பின்னர் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்ததாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சென்னிமலையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் ரீல்ஸ் எடுத்து தருமாறு கேட்டதாகவும், அதன்படி ரீல்ஸ் எடுத்து கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே, அந்த மருத்துவரின் ஐபோன் காணாமல் போனதாக கூறி, தன்னையும், தனது தாய் கோமதியையும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதுடன், போலீசில் ஒப்படைத்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த தானும் தனது தாயும் கடந்த மாதம் 3-ம் தேதி விஷம் குடித்ததாகவும், இதில் தனது தாய் கோமதி உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தனது தாயின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீனதயாளன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
