உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சண்டை போட்டுக்கொண்ட இளைஞர்களை
மடக்கிப் பிடித்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இளைஞர்கள் சிலர் திடீரென ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டு அடிதடியில் ஈடுபட்டனர்.

நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் அதிகளவில் இருந்த நேரத்தில் நடந்த இந்தத் திடீர் மோதலால், மருத்துவமனைப் பணியாளர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
அரசு மருத்துவமனை வளாகத்தில் இளைஞர்கள் மோதிக்கொள்வது குறித்து மடத்துக்குளம் காவல் நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் அருள் தலைமையிலான போலீசார், அடிதடியில் ஈடுபட்ட இளைஞர்களைச் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் மோதலில் ஈடுபட்ட அனைவரையும் விசாரணைக்காக மடத்துக்குளம் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
நோயாளிகள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் இளைஞர்கள் கும்பலாகச் சேர்ந்து அடிதடியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
