மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கூட்டத்தை கட்டுப்படுத்துவதிலும், பக்தர்களை ஒழுங்குபடுத்துவதிலும் ஏற்பட்ட சிரமம் காரணமாக பலரும் அதிருப்தியடைந்தனர். இந்த நிலையில், அங்கு வந்த அமைச்சர் நிர்மல்குமாரிடம் சில பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவித்ததுடன், வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
கூட்ட நெரிசலால் ஏற்பட்ட சிரமம் குறித்து பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர். ஒரு கட்டத்தில், அமைச்சர் முன்னிலையிலேயே சிலர் “அரசு ஒழிக” என முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், ஆத்திரமடைந்த பெண்கள் சிலர், “உங்களுக்கு வாக்களித்ததே வேஸ்ட்” என அமைச்சரிடம் கூறி தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
குடமுழுக்கு விழாவை காணவும், சாமி தரிசனம் செய்யவும் அதிகளவில் பக்தர்கள் திரண்ட நிலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாகவே இந்த எதிர்ப்பு எழுந்ததாக கூறப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில், அமைச்சர் முன்னிலையிலேயே பொதுமக்கள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டதும், பெண்கள் நேரடியாக தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியதும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
