ரீல்ஸ் ஆட்சியின் காரணமாக தமிழகம் ரிவர்சில் போய்க்கொண்டிருக்கிறது. லண்டன் பயணத்தின் தோல்வியை மறைக்கவே முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் ரைடு நடத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
விழுப்புரத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு கடந்த திமுக ஆட்சியில் மணிமண்டபம் கட்டப்பட்டது. தந்தை பெரியாரின் பிறந்த நாளான இன்று சமூக நீதி நாளாக கடைப்பிடிக்க முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அந்த அடிப்படையில் இன்று விழுப்புரத்தில் உள்ள 21 சமூக நீதி போராளிகளுக்கு மலர் அஞ்சலி செலுத்த வகையில் சமூக நீதி நாள் கடைபிடிக்கப்பட்டது.
இதில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு போராட்டத்தில் உயர்நீத்த 21 தியாகிகளின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்தார். விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மத்திய மற்றும் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கடந்த திமுக ஆட்சியில் வன்னியர்களின் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயர்நீத்த தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டி அதனை முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் தற்போது வரை அந்த குடும்பங்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்பட்டு வருவதற்கு முக்கிய காரணம் திமுக.
முதல்வர் விஜயின் லண்டன் பயணத்தின் ரகசியம் பொதுமக்களுக்கு நன்றாக தெரியும். எனவே அதனை மறைப்பதற்காக தான் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் ரைடு என தமிழக அரசு நாடகமாடுகிறது. வாக்களித்த பொதுமக்களே தற்போது ஏன் தவெக விற்கு வாக்களித்தோம் என வருந்திக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் தொழில் முதலீடுகளை எடுப்பதற்கு முதல்வர் சென்றபோது அந்தத் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்துச் சென்றார். ஆனால் தற்போது துறைக்கு சம்பந்தம் இல்லாத அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அழைத்துச் சென்றது ரீல்ஸ் எடுப்பதற்கு மட்டுமே. எனவே இந்த ரீல்ஸ் ஆட்சியால் தமிழகம் ரிவர்சில் அதாவது பின்னோக்கி செல்கிறது என குற்றம் சாட்டினார்.
