வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பத்தலப்பல்லி கிராமத்தில், விவசாய நிலங்களுக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்தது.
விவசாயி கங்காதரன் மற்றும் அவரது மனைவி, விவசாய நிலத்தில் உள்ள வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது, நாய்கள் அலறும் சத்தம் கேட்டு எழுந்துள்ளனர். அப்போது வீட்டின் அருகே யானை நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அங்கிருந்து ஓடியுள்ளனர்.
தொடர்ந்து வீட்டுக்குள் புகுந்த யானை, வீட்டை சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த நெல் மற்றும் அரிசியையும் சாப்பிட்டுள்ளது.
தகவலறிந்து வந்த பேரணாம்பட்டு வனத்துறையினர், பொதுமக்களின் உதவியுடன் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது உமாபதிக்கு சொந்தமான வாழை மரங்களையும், கோவிந்தனின் நெற்பயிர்களையும் யானை சேதப்படுத்தியது. மேலும், பாலையா என்பவரது வீடும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இரவு முழுவதும் யானையை விரட்டும் பணி நடைபெற்ற நிலையில், வனத்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, யானையை விரட்டுவதற்காக வனத்துறையினர் பட்டாசுகளை பயன்படுத்தினர். யானைகளுக்கு அச்சம் அல்லது அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் பட்டாசு உள்ளிட்டவற்றை பயன்படுத்துவது தொடர்பாக நீதிமன்றங்கள் ஏற்கனவே பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள நிலையில், பத்தலப்பல்லி பகுதியில் , வனத்துறையினர் பட்டாசு பயன்படுத்தியது,
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
