திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக சத்தியபாமா அறிவிக்கப்பட்டுள்ளார்.இவர் கடந்த முறை தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற நிலையில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.
இதன் காரணமாக தாராபுரத்தில் மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழக வெற்றி கழக வேட்பாளராக சத்தியபாமா அறிவிக்கப்பட்டார்.
தவெக வேட்பாளர் சத்யபாமா பிரச்சாரம் செய்யும் பகுதிகளில் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இதனால் தவெக வேட்பாளர் சத்யபாமா போலீசார் பாதுகாப்புடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தாராபுரம் நஞ்சியம்பாளையம் கிராமத்தில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளரை ஆதரித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண கோரி அப்பகுதி பொதுமக்கள் அவரை அணுகினர். அப்போது அங்கிருந்த அதிமுகவினர் வேட்பாளர் எங்கே? எனக்கூறி அமைச்சரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பொதுமக்கள்,அதிமுக மற்றும் தவெக நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த போலீசார் இரு தரப்பினரையும் விலக்கினர். மேலும் ஏராளமான போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரச்சாரக் களத்தில் அதிமுக மற்றும் தவெக வினர் நேரடியாக மோதலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
