மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட கொளத்தூர் கிராமத்தில் கல்குவாரியை மூட மரகதம் குமரவேல் தான் காரணம் என தவறான தகவல் கூறி வாக்கு சேகரித்த தவெகவினரை கிராம மக்கள் விரட்டியடித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரவம்பாக்கம் ஊராட்சி, கொளத்தூர் கிராமத்தில் கல்குவாரி உள்ளது.
இந்த கல்குவாரியில் பாறைகளவ உடைக்க வெடி வைக்கும் போது பொதுமக்களுக்கு மிகப்பெரிய சப்தத்துடன் கூடிய நிலஅதிர்வு மற்றும் கற்கள் வீட்டின் மீது வந்து விழுந்து வீடுகள் சேதம் மற்றும் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த கல்குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனது. விவசாய நிலங்கள் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் கொளத்தூர் கிராம மக்கள் கல்குவாரியை மூடக்கோரி பலகட்ட போராட்டங்களை நடத்திய பின்னர் தற்காலிகமாக குவாரி மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று கொளத்தூர் கிராமப்பகுதியில் வாக்கு சேகரிக்க வெளி மாவட்டங்களை சேர்ந்த தவெகவினர் வந்திருந்தனர். அப்போது கல்குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்காமல் தற்போது ஓட்டு மட்டும் ஏன் கேட்க வருகிறீர்கள் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு தவெகவினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் தான் கல்குவாரியை மூட நடவடிக்கை எடுத்தார் என கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், நாங்கள் போராடி அரசு அதிகாரிகளை கொண்டு தற்காலிகமாக மூடினோம் என வாக்குவாதம் செய்தனர். பொய்யான தகவலை சொல்லி ஓட்டு கேட்க வரவேண்டாம் என கூறி வாக்கு சேகரிக்க வந்தவர்களை கிராம மக்கள் விரட்டி அடித்தனர்.
