திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலு மூலைக்கிணறு ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகாந்த். இவர் திருச்செந்துர் அடுத்த ஓடக்கரை பகுதியில் உள்ள தனியார் லாட்ஜில் இரவு நேர மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 8 ம் தேதி இரவு பணிக்கு வந்த போது லாட்ஜ் முன்பு தனது விலை உயர்ந்த ஆர்15 இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பணியில் இருந்துள்ளார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை.
உடனடியாக லாட்ஜில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது 9ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் அங்கு வந்த மர்மநபர் ஒருவர் லாட்ஜ் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து சிசிடிவி காட்சிகளை கொண்டு ஜெயகாந்த் ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் திருடப்பட்ட இருசக்கர வாகனத்தையும்,மர்ம நபரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
