உதகை பகல்கோடு மந்து பகுதியில் தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய உடை அணிந்து, தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பாரம்பரிய நடனமாடினார்.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் நேற்று கூடலூர் ஓவேலி லாரிஸ்டன் எஸ்டேட் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி புலியை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து இன்று உதகை அருகில் அமைந்துள்ள பகல்கோடு மந்து பகுதியில் தோடர், கோத்தர், இருளர், காட்டுநாயக்கர் உள்ளிட்ட பழங்குடியின மக்களின் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வுமேற்கொண்டும் குறைகளை கேட்டு அறிந்தார், மேலும் பழங்குடி இன மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
பழங்குடியினர் கிராமத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள வருகை புரிந்த வனத்துறை அமைச்சருக்கு தோடர், கோத்தர், இருளர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய சால்வை அணிவித்து நடனமாடி உற்சாகமாக வரவேற்பளித்தனர்.
இதனை தொடர்ந்து தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனத்தின் போது தோடர் இன மக்களோடு வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமாரும் அவர்களது பாரம்பரிய உடை அணிந்து உற்சாகமாக நடனமாடினார்.
