Headlines

காலியாக உள்ள 4724 செவிலியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பபடும் : அமைச்சர் அருண்ராஜ்

காலியாக உள்ள 4724 செவிலியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பபடும் : அமைச்சர் அருண்ராஜ்

தமிழகத்தில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்பும் வகையில், 4,724 செவிலியர்கள் மாவட்ட நலச் சங்கம் மூலம் வெளிப்படையான முறையில் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. மழைக்காலம் தொடங்குவதை முன்னிட்டு, பொதுமக்களை நோய்களில் இருந்து பாதுகாக்கவும், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் இந்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சம்பத்குமார் முன்னிலை வகித்தார்.
மேலும், இதில் கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், அரசினர் மருத்துவமனை முதல்வர்கள் மற்றும் சுகாதாரத் துறை உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர்கள், கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், அனைத்து வட்டாரங்களிலும் போதிய அளவு தடுப்பு மருந்துகள் மற்றும் சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

அத்துடன், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் தேங்கி நிற்கும் நல்ல தண்ணீரை அகற்றி, விழிப்புணர்வு நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

அதை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அருண்ராஜ்,
தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,724 செவிலியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, நாளிதழ்களில் விளம்பரமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்கள் 10, 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் நர்சிங் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், மிகவும் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் நடைபெறும். மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு சற்றே அதிகமாக இருந்தாலும், கடந்த இரண்டு வாரங்களாக அது படிப்படியாகக் குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

தமிழகத்தில் டெங்குவினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கும் தூய்மையான தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீரைத் தேக்கி வைக்கும் நிறுவனங்கள் மற்றும் கட்டுமான இடங்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படும். முதல் முறை மீறினால் ₹10,000 அபராதமும், தொடர்ந்து மீறினால் ₹20,000 அபராதமும் விதிக்கப்படும். கோவையில் விரைவில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது. மேலும் ESI மருத்துவமனையில் புதிய செவிலியர் கல்லூரி தொடங்கப்படும். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூபாய் 4.50 கோடியில் இதய நோயாளிகளுக்கான நவீன சிகிச்சை உபகரணங்களும், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ₹6 கோடியில் தாய்-சேய் நலக் கட்டிடமும் அமைக்கப்படும். என்று தெரிவித்தார்.

பொதுமக்களுக்குத் தரமான மருத்துவ சேவை கிடைக்க அரசு மருத்துவமனைகளிலேயே அனைத்து நவீன வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர், பொதுமக்கள் அரசு மருத்துவச் சேவைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தாராபுரம் இடைத்தேர்தல் தொகுதிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டது குறித்துப் பேசிய அமைச்சர், “கடந்த நான்கு மாதகால ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொன்னாலே போதும். ஊழலை மற்றும் லஞ்சத்தைக் கட்டுப்படுத்த முடியுமா என யாரும் நம்பாத நிலையில், அதைச் சாதித்துக் காட்டியுள்ளோம்” எனக் குறிப்பிட்டார். இந்த தேர்தலில் திமுக கூட்டணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் எனக் நம்பிக்கை தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலை நோக்கியே செயல்படுவார்கள்; ஆனால் சிறந்த தலைவர்கள் அடுத்த தலைமுறையை நோக்கியே செயல்படுவார்கள். எங்களது பயணம் தலைமுறைகளுக்கானது” என்று கூறினார். மாற்றுக் கட்சிகளிலிருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பளிப்பது குறித்த கேள்விக்கு, “தவெக என்பது ஒரு அரசியல் இயக்கம். வரும் தேர்தல்களில் தமிழகத்தை முன்னோக்கிச் செல்ல அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது” என்றும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *