திருமுருகன்பூண்டி நகராட்சி அம்மாபாளையத்தில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடைகளை அடைத்து வீடுகளுக்கு முன்பு கருப்பு கொடி கட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட அம்மாபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழிகளில் மாநகராட்சி குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் இன்று பல்வேறு கட்ட போராட்டத்தை மேற்கொண்டனர்.
குப்பை கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன், தங்கள் வாழ்வாதாரத்திற்கும், பொதுமக்களின் சுகாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி, அம்மாபாளையம் பகுதி மக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை பதிவு செய்தனர்.
மேலும், போராட்டத்திற்கு ஆதரவாக அப்பகுதியில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டன.
தொடர்ந்து பொதுமக்கள் ஒன்று திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதையடுத்து, அம்மாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்கள் திரண்டிருந்த நிலையில், அனைவரையும் கைது செய்வதாக போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒரு தரப்பினர் திடீரென திருப்பூர்–கோவை பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில், கடந்த வாரம் அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் குப்பை கொட்டுவது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது, தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் அவிநாசி சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் கமலி திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் பகுதியில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அதன்பிறகும் அம்மாபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழிகளில் குப்பைகள் கொட்டப்படுவதாக கூறி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதன் காரணமாகவே இன்று வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும், கடைகளை அடைத்தும், தர்ணா மற்றும் சாலை மறியல் போராட்டத்திலும் பொதுமக்கள் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட குமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
குப்பை கொட்டுவதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என்பதே தங்களது முக்கிய கோரிக்கை என பொதுமக்கள் தெரிவித்துள்ள நிலையில், அம்மாபாளையம் பகுதியில் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குப்பை கொட்டும் விவகாரம் தொடர்பாக பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் அம்மாபாளையம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
