திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பகுதியில் தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வரும் அமைச்சர் வெங்கடரமணன், நேற்று ஆறுமுகநேரி பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகளுக்கு அதிகாரிகள் யாரும் உடன் இல்லாமல் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
அப்போது நியாயவிலைக் கடை பணியாளர்களிடம் கடையின் செயல்பாடுகள், பொருட்கள் இருப்பு மற்றும் பொதுமக்களுக்கு பொருட்கள் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கடைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம், பொருட்கள் சீராகவும் முறையாகவும் வழங்கப்படுகிறதா என்பது குறித்து அமைச்சர் நேரடியாக கேட்டறிந்தார்.
மேலும், பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வேறு பொருட்களை பயன்படுத்தி பொருட்களை வழங்க வேண்டும் என நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
இதையடுத்து மற்றொரு நியாயவிலைக் கடைக்கும் சென்ற அமைச்சர், அங்கு பொருட்கள் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா என்பது குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது, நீண்ட தூரம் சென்று நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வாங்க வேண்டிய நிலை இருப்பதாகவும், பொதுமக்களின் வசதிக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலேயே புதிய நியாயவிலைக் கடைகள் அமைத்து தர வேண்டும் என்றும் பொதுமக்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கை குறித்து உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார்.
அதிகாரிகள் யாரும் உடன் இல்லாமல் அமைச்சர் நேரடியாக நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
