தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி பரமசிவம்(53). இவர் இன்று தனது இரு சக்கர வாகனத்தில் கோவில்பட்டியில் இருந்து ஊருக்கு சென்றுள்ளார்.
இளையரசனேந்தல் சாலையில் ராதாகிருஷ்ணன் நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி பரமசிவத்தின் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில், நிலை தடுமாறிய பரமசிவம் இருசக்கர வாகனத்துடன் முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே பரமசிவம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் விகாஸ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
