தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், குண்டடம் மேற்கு ஒன்றியம் பெல்லம்பட்டி பகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கச் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜிடம் அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சத்தியபாமா போட்டியிடுகிறார். அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தற்போது திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை களத்தில் உள்ளன.
பெல்லம்பட்டியில் எதிர்ப்பு
இந்த நிலையில்,குண்டடம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அப்பகுதி மக்கள் சிலர் அவரிடம் வாக்கு சேகரிக்க வேண்டாம் எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதே விவகாரத்தில், சத்தியபாமாவுக்குப் பதிலாக அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கச் சென்ற அமைச்சர் அருண்ராஜிடமும், பெல்லம்பட்டி பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அப்போது, “வாக்கு கேட்டு வராதீர்கள்” எனக் கூறி சிலர் அமைச்சரிடம் விவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரம் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் பிரச்சாரத்தின்போதும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
“நம்பிக்கையோடு ஓட்டு போடுங்கள்”
பெல்லம்பட்டி மக்களின் எதிர்ப்புக்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், “நம்பிக்கையோடு ஓட்டு போடுங்கள். நீங்கள் கேட்பதை செய்து தருகிறோம்” என உறுதியளித்தார்.
மேலும், தாராபுரம் தவெக வேட்பாளருக்கு எதிராக சில இடங்களில் தெரிவிக்கப்படும் எதிர்ப்புகள், மாற்று அரசியல் கட்சிகளின் தூண்டுதலின் பேரில் திட்டமிட்டு நடத்தப்படுவதாக அமைச்சர் அருண்ராஜ் ஏற்கனவே குற்றம்சாட்டியுள்ளார். மக்களின் உண்மையான மனநிலை தங்களுக்கு தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடரும் எதிர்ப்புகள் – தவெக தரப்பு விளக்கம்
தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா பிரச்சாரம் மேற்கொண்ட சில பகுதிகளில் எதிர்ப்பு ஏற்பட்டதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு பதிலளித்த சத்தியபாமா, தனக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், திமுக மற்றும் அதிமுக தரப்புகள் இணைந்து திட்டமிட்டு எதிர்ப்பு போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்குவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையே, தாராபுரம் தொகுதியின் சில பகுதிகளில் தேர்தல் புறக்கணிப்பு தொடர்பான பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.
சூடுபிடிக்கும் தாராபுரம் தேர்தல் களம்
தாராபுரம் இடைத்தேர்தலில் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
தவெக கூட்டணி சார்பில் முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், தொகுதியில் வேட்பாளர்களுக்கு எதிராக எழும் பொதுமக்களின் எதிர்ப்புகள், உள்ளூர் பிரச்சினைகள் மற்றும் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்புகள் ஆகியவை தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய விவாதங்களாக மாறியுள்ளன.
