ஆந்திர மாநிலம் டெக்கலி அருகே ரயிலில் அடிபட்டு 4 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி வருகிறார்.
ராவிலசா பகுதி ரயில்வே தண்டவாளம் அருகே இந்த கோர விபத்து நடந்துள்ளது. காயமடைந்த வாலிபர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையின்படி, ராவிலசா பகுதியில் உள்ள தண்டவாளத்தின் அருகே தேங்கியிருந்த வெள்ள நீரில் மீன்பிடிப்பதற்காக வாலிபர்கள் சிலர் சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ‘ராஜாராணி எக்ஸ்பிரஸ்’ ரயிலை கவனிக்காததால் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், வாலிபர்கள் இயற்கை உபாதை கழிப்பதற்காகச் சென்றபோது இந்த விபத்து நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விபத்து குறித்துத் தகவலறிந்ததும் காவல்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள், விபத்தில் பலியானவர்களின் விவரங்கள் மற்றும் விபத்து நடந்த சூழ்நிலை குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
