தொடர் மின்தடையால் மக்கள் மற்றும் தொழில்துறையினரின் நம்பிக்கை இழக்கப்பட்டு வருகிறது. அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி பல தலைமுறைகள் பின்னோக்கிச் செல்லும் அபாயம் ஏற்படும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் தொழில் முதலீட்டாளர்களுக்கு தற்போதுள்ள சூழலில் அவநம்பிக்கையும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட பல தொழிற்சாலைகள் ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டால் தொழில்துறை கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகிறது. அமைச்சரோ இது மின்வெட்டு அல்ல, மின்தடை என்று விளக்கம் கூறி வருகிறார்.
தொடர் மின்தடையால் மக்கள் மற்றும் தொழில்துறையினரின் நம்பிக்கை இழக்கப்பட்டு வருகிறது. அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி பல தலைமுறைகள் பின்னோக்கிச் செல்லும் அபாயம் ஏற்படும். தமிழகத்தில் இனி ஒரு மாவட்டம் புதிதாக உருவாக்கப்படும் என்றால், அது பொள்ளாச்சியாகத்தான் இருக்க வேண்டும்.
கோவை மிகப்பெரிய மாவட்டமாக உள்ளதால் நிர்வாக வசதிக்காக பொள்ளாச்சியைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது கொமதேகவின் தொடர் கோரிக்கையாகும். எந்த ஆட்சி வந்தாலும் இக்கோரிக்கை நிறைவேறும் வரை எங்கள் முயற்சி ஓயாது.
அதேபோல், சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொழில் முதலீடுகளுக்கு மிகவும் அவசியமானது. ஆனால், அறிவிக்கப்பட்ட இடங்களில் அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாகப் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இடைத்தேர்தல் விவகாரத்தில், வெற்றி பெற்று வெறும் 10 நாட்களிலேயே மக்கள் அளித்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வேறு கட்சியில் இணைந்து மீண்டும் வேறு சின்னத்தில் வாக்கு கேட்பது எந்த விதத்திலும் நியாயமற்றது. இந்த அநீதியை முன்வைத்துதான் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணிகளைப் புறந்தள்ளி தனி வேட்பாளரை நிறுத்தியுள்ளன. மக்கள் எப்போதும் ஏமாந்து கொண்டே இருக்க மாட்டார்கள்; வரும் காலங்களில் சுயலாப முடிவுகளை எடுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இந்தத் தேர்தல் தகுந்த பாடமாக அமையும். ஜனநாயகத்தில் அரசின் செயல்பாடுகளையும் அமைச்சர்களின் நடவடிக்கைகளையும் விமர்சிக்க அனைவருக்கும் முழு உரிமை உண்டு. ஆனால், தனிமனித வாழ்க்கையையோ அல்லது தனிநபர்களையோ இழிவுபடுத்தி கொச்சையாகப் பேசுவது தேவையற்றது; அது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
மத்திய அரசின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான (யுபிஐ) கட்டண அறிவிப்பு குறித்து தற்போது வணிக பயன்பாட்டிற்கு மட்டுமே என சமாதானம் கூறினாலும், எதிர்காலத்தில் அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் விதிக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை அவிநாசி சாலை மேம்பாலத்தை நீலம்பூர் வரை நீட்டிப்பது மற்றும் மிக மோசமான நிலையிலுள்ள எல் அண்ட் டி பைபாஸ் சாலையை விரைந்து விரிவாக்கம் செய்வது மிக அவசியமாகும். அரசு இனியும் தாமதிக்காமல் இந்த உள்கட்டமைப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.இவ்வாறு ஈ.ஆர்.ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
