திருப்பத்தூர் அருகே அரசு பள்ளி மாணவிகளை கடத்த முயன்ற வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் 9-ம் வகுப்பு மாணவி, அவரது தங்கையுடன் சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த 4 வாலிபர்கள் சிறுமியின் கையை பிடித்து இழுத்து முறுக்கி அழைத்துச் செல்ல முயன்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கத்தி கூச்சலிட்டு அலறியதால் அவரது சத்தம் கேட்டு அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இதையடுத்து மறுநாள் பள்ளிக்கு செல்லும் வழியில் 8-ம் வகுப்பு மாணவியை சிலர் இருசக்கர வாகனத்தில் தூக்கி உட்கார வைத்து அழைத்து செல்ல முயற்சி செய்துள்ளனர். தொடர்ச்சியாக பள்ளி மாணவிகளை குறிவைத்து நடந்த கடத்தல் முயற்சியால் சிறுமிகளின் பெற்றோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
இதுகுறித்து சிறுமிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர்.மேலும் தலைமை ஆசிரியர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவில்லை என கூறப்படும் நிலையில் சிறுமிகளின் பெற்றோர் கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிகளை கடத்த முயன்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் அந்த வாலிபர்கள் அரசு பள்ளியை கடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளி செல்லும் வழியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
