கும்பகோணம் அருகே 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஒரே நேரத்தில் கடித்து குதறியதில் முதியவர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த சின்னதுரை (75) என்பவர், கடந்த சில வருடங்களாக கும்பகோணம் பாலக்கரை – சென்னை செல்லும் சாலையில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார்.
வழக்கம்போல நேற்று இரவும் அவர் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு திரண்ட 10-க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் அவரை கூட்டம் கூட்டமாக கடித்து குதறியுள்ளன.
இன்று அதிகாலை அப்பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள், உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சின்னதுரையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும், கை, கால் மற்றும் முகத்தில் பலத்த காயமடைந்திருந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கும்பகோணம் தாலுகா போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, தூங்கிக்கொண்டிருந்த முதியவரை நாய்கள் கொடூரமாகத் தாக்கும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சாலையோரங்களில் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லையால் பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
உடனே மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
