குவைத்தில் வேலைக்கு சென்று உணவின்றி சுமார் 50 நாட்களாக தவிப்பதாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பெண் வீடியோ வெளியிட்ட நிலையில், அவரை இந்திய தூதரக அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஊராங்கனி கிராமத்தைச் சார்ந்த ஆறுமுகம் என்பவரின் மகள் வனிதா. இவருக்கு 15 வயதில் அகிலன் என்ற மகனும் 11 வயதில் ரோஜா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் இவருக்கும் இவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக வனிதா தனியாக பிரிந்து தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
குடும்ப வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வந்த வனிதா இடைத்தரகர்கள் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குவைத் நாட்டிற்கு வீட்டு வேலைக்கு சென்றதாக சொல்லப்படுகிறது.
வீட்டு வேலைக்கு சென்ற வனிதா, கடந்த இரண்டு மாதங்களாக சித்திரவதை செய்யப்படுவதாகவும், கடந்த 50 நாட்களுக்கு மேலாக உணவு கூட இல்லாமல் தவித்து வருவதாகவும், தற்போது பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருவதாகவும், தனது குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் குவைத் நாட்டில் தவித்து வருவதாகவும் தமிழகம் அழைத்து வர கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதைத்தொடர்ந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட அவர் இந்திய தூதரக கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
