Headlines

நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்து : திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் பலி

நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்து : திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் பலி

கேரள மாநிலம் திருச்சூரில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதிய பயங்கர விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சூர் மாவட்டம் காய்பமங்கலம் பகுதியில் உள்ள பனம்பிக்குன்னு சென்டரில், நேற்று இரவு சுமார் 11.42 மணியளவில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. சுற்றுலா பயணமாக கேரளாவுக்கு சென்றிருந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த PSNA பொறியியல் கல்லூரி மாணவர்கள் 8 பேர், தமிழக பதிவு எண் கொண்ட காரில் பயணம் செய்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை 66-ல் சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில், மாணவர்கள் பயணித்த கார் அதிவேகமாக மோதியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரில் சிக்கி உயிரிழப்பு

லாரியின் பின்புறத்தில் கார் பயங்கரமாக மோதியதில், வாகனம் முற்றிலும் உருக்குலைந்தது. காருக்குள் சிக்கியிருந்த மாணவர்களை மீட்புப் படையினர் மற்றும் போலீசார் வாகனத்தை வெட்டி வெளியே எடுத்தனர்.

விபத்தில் காரில் பயணித்த 8 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் சிலர் அடையாளம் காணப்பட்டனர்

உயிரிழந்தவர்களில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்வா (20), திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யா (20), மதுரையைச் சேர்ந்த சந்தோஷ் (20), மதுரையைச் சேர்ந்த பிரசன்னா, திண்டுக்கல்லைச் சேர்ந்த யுவசஞ்சித் (20) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் மூன்று பேரின் அடையாளம் உடனடியாக உறுதி செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த அனைவரும் ஒரே கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

சிசிடிவி காட்சிகள் வெளியாகின

விபத்து நடைபெற்ற பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் விபத்துக் காட்சிகள் பதிவாகியுள்ளதாகவும், அந்தக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் சாலைப் பணிகள் மற்றும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே காரில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 8 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழகத்திலும் கேரளாவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *