பொள்ளாச்சியில் தந்தையின் நண்பர் வீட்டில் ஒன்பது பவுன் நகையை திருடி, காதலனுக்கு இரு சக்கர வாகனம் வாங்கித் தந்த கல்லூரி மாணவியை கைது செய்த போலீசார், தலைமறைவான காதலனை தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையம் பகுதியில் வசிப்பவர் ராஜேஷ், இவரது 19 வயது மகள் பொள்ளாச்சியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் (சி.ஏ) படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 16.ஆம் தேதி ஊஞ்சவேலம்பட்டியில் உள்ள தந்தை ராஜேஷின் நண்பரான தமிழ்ச்செல்வன் வீட்டுக்கு 19 வயது மாணவி சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி உள்ளார்.
இதனிடையே பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒன்பது பவுன் தங்கச் செயின் காணாமல் போனதாக தமிழ்ச்செல்வன் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டதில் அரசு கல்லூரியில் படிக்கும் 19 வயது மாணவி கடந்த 16.ஆம் தேதி வீட்டுக்கு வந்தபோது, பீரோவில் இருந்த ஒன்பது பவுன் தங்கச் செயினை திருடி சென்று, பொள்ளாச்சியில் உள்ள ஒரு நகைக்கடையில் திருடிய நகையை 2.5 லட்சம் ரூபாய்க்கு விற்று, அந்த பணத்தை வைத்து மாணவியின் காதலன் மாக்கிக்னாம்பட்டியை சேர்ந்த ஜனகன் சிவாவிற்கு புதிய இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்தது தெரியவந்தது.
பின்னர் 19 வயது மாணவியை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் தலை மறைவாக உள்ள காதலன் ஜனகன் சிவாவை தேடி வருகின்றனர்.
நகையைத் திருடிய பணத்தில் காதலனுக்கு, புது இருசக்கரம் வாங்கி கொடுத்தபோது, அதை ரீல்ஸாக எடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
