ஆம்பூர் அருகே தனியார் பள்ளி பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை தாக்கி ரகளையில் ஈடுபட்ட
போதை ஆசாமிகளை கிராம மக்கள் சுற்றிவளைத்து பிடித்து தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட ராமசந்திராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் நளினி வித்யாலயா தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பேருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
ராமச்சந்திராபுரம் மதுபான கடை அருகே பேருந்து சென்ற போது மது போதையில் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் பேருந்தை வழிமறித்து பள்ளி பேருந்து ஓட்டுநரை தாக்கி கீழே தள்ளி ரகளையில் ஈடுபட்டனா்.
மேலும் பேருந்து மீது ஏறி கண்ணாடியை உடைக்க முற்பட்டு பேருந்தை கொளுத்தி விடுவேன் எனவும் மிரட்டியுள்ளனர்.
மாணவர்கள் பேருந்தில் இருப்பதாக அங்கு இருந்த சிலர் அறிவுரை சொல்லியும் அவர்களையும் மது போதை ஆசாமிகள் மிரட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சாலையில் சென்றவர்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மது போதை ஆசாமிகளைப் பிடித்து சரமாரியாக தாக்கி காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து சென்ற உமராபாத் காவல் துறையினர் பேருந்து ஓட்டுனர் ரவி அளித்த புகாரின் பேரில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட அயித்தம்பட்டு பகுதியை சேர்ந்த தீபக்ராஜ் மற்றும் அவருடன் வந்த வெங்கடேசன் ஆகிய இருவரையும் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பள்ளி மற்றும் குடியிருப்புகள் உள்ள இந்த பகுதியில் மதுபோதை ஆசாமிகள் மது அருந்திவிட்டு வீட்டின் முன் படுத்துக்கொள்வதாகவும் ,இதனால் அப்பகுதி மக்கள் நாள்தோறும் அச்சத்தில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர். மக்கள் ,மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் இந்த மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
