காதலுடன் இருந்த இளம்பெண்ணை கத்தியை காட்டி பாலியல் வன்கொடுமை
செய்த மூவருக்கு ஆயுள் தண்டனையும், 4 லட்சம் அபராதமும் விதித்து ராணிப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராணிப்பேட்டை அடுத்த தெங்கால் பாலாற்றங்கரை அருகே அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான நவலாக் தென்னை பண்ணை அருகே கடந்த ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி இரவு காதல் ஜோடி தனிமையில் பேசிக் கொண்டிருந்தனர்
அப்போது அவ்வழியாக வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் அந்த காதல் ஜோடியை வழிமறித்து தகராறில் ஈடுபட்டது.
பின்பு காதலனை கண்மூடித்தனமாக தாக்கி, இளம் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி சிறிது தூரம் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சிப்காட் போலீசார் வழக்கினை ராணிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர்.
விசாரணையில் கூட்டு பாலியல் வன்கொடுமையில் சம்பவத்தில் ஈடுபட்ட அவரைக்கரை பகுதியை சேர்ந்த சகோதரர்களான பார்த்திபன் – சிவராஜ், மற்றும் ராஜா ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தேன்மொழி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்ததோடு, முதல் குற்றவாளியான பார்த்திபனுக்கு 1.40 லட்சமும், மற்ற இருவருக்கு தலா 1.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
