ஆம்பூர் அருகே பாலாற்றில் சட்டவிரோதமாக அள்ளி பதுக்கப்பட்ட மணலை அதிகாரிகள் ஏலம் விட்டபோது இருதரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ,வெங்கிலி, குளிதிகை உள்ளிட்ட பாலாற்று பகுதிகளில்
மயில் வாகனன் என்பவர் கடத்தி பதுக்கி வைத்திருந்த 100 யூனிட் மணலை
வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் கடந்த திங்கள் கிழமை பறிமுதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட மணலை பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேற்று ஏலம் விடுவதாக அறிவித்திருந்தனர். மாதனூர்,பாலூர் திருமலைகுப்பம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பலர் ஏலம் எடுக்க வந்திருந்தனர்.
ஏலம் விட தொடங்கிய போது பாலூர் ஊராட்சியை சேர்ந்தவர்கள் ஏலம் தங்கள் ஊராட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே எடுக்க வேண்டும். ஏனென்றால் தங்களுக்கு கோயில் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தேவைப்படுவதாகவும் வெளியூர் ஆட்களுக்கு ஏலம் விட அனுமதிக்க வேண்டாம் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் அதிகாரிகள் பொது ஏலம் தான் விடுவோம் எனவும் இதில் யார் வேண்டுமானாலும் ஏலம் எடுக்கலாம் என தெரிவித்தனர்.
இதனால் அங்கிருந்த இரு தரப்பு இளைஞரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது.
காவல்துறை முன்னிலைலேயே ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு தள்ளி விட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஏலத்தை தள்ளி வைப்பதாக அறிவித்தனர் . இதையடுத்து அங்கிருந்த அனைவரும் கலைந்து சென்றனர்.
பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முறையாக ஏலம் விடுவது தொடர்பாக தெரிவிக்காததே இது போன்ற பிரச்சனைக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
