கோவை பாலக்காடு சாலை மதுக்கரை அருகே சுற்றுலா வேனில் வந்த மலேசிய சுற்றுலா பயணிகளை அரிவாளால் தாக்கி, துரத்தி சென்று துப்பாக்கியை காட்டி மிரட்டிய இருவரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மலேசியாவில் இருந்து தமிழகம் மற்றும் கேரளாவிற்கு சுற்றுலா வந்த 10 பேர் கொண்ட சுற்றுலா பயணிகள் சுற்றுலா வேன் மூலம் கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
கோவை பாலக்காடு நெடுஞ்சாலை க.க.சாவடி அடுத்த நவக்கரை அருகே வந்தபோது அப்பகுதியில் இருந்த பெட்ரோல் பங்கில் ஓட்டுநர் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார்.
அப்போது அதில் பயணித்த ஒரு சிலர் அங்கிருந்த கழிவறைக்கு சென்ற நிலையில் அங்கு வந்த இரண்டு நபர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் மலேசியாவைச் சேர்ந்த 10 சுற்றுலாப் பயணிகள் பயணித்த Force Urbania வாகனத்திற்குள் ஏறி அரிவாளால் தாக்கியுள்ளனர்.
அதில் மலேசிய சுற்றுலா பயணி லோகநாதன் மற்றும் அவரது மகன் யுகேந்திரன் ஆகியோருக்கு வயிறு மற்றும் தோள்பட்டை ஆகிய இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்து இருசக்கர வாகனம் மூலம் தப்பிய இரண்டு மர்ம நபர்கள் பின்னர்,சுற்றுலா வாகனத்தை பின்தொடர்ந்து துரத்தி வந்து மதுக்கரை மார்க்கெட் பகுதியில் வைத்து வாகன ஓட்டுனரை கத்தி மற்றும் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர் .
இதனால் பதட்டம் அடைந்த ஓட்டுநர் அதிவேகமாக வந்து சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தவே அங்கு பொதுமக்கள் கூடியுள்ளனர்.
இதனால் சுதாரித்துக் கொண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
தொடர்ந்து ரத்த காயத்துடன் இருந்த இருவரையும் அப்பகுதி பொதுமக்கள் மீட்டு மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததுடன் சம்பவம் தொடர்பாக மதுக்கரை காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியதுடன் சம்பவத்தை நேரில் பார்த்த பொது மக்களிடம் விசாரணை நடத்தினர் .
தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து பின்னர் மதுக்கரை காவல் நிலையத்தில் தீவிர விசாரணை நடத்தினார்.
இதனிடையே மலேசிய சுற்றுலாப் பயணிகளை அரிவாளால் வெட்டி தாக்கியதுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டி தப்பியோடிய இரண்டு பேரை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட எல்லை பகுதிகளில் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
