மதுரை தத்தனேரி மின் மயானத்தில் குண்டுகள் முழக்கமின்றி Guard of Honour கௌரவ மரியாதையுடன் பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் தமிழ் மொழியில் ஆளுமை பெற்றவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா, தனது 90-வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். உடல் நலக்குறைவால் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
மக்களின் அஞ்சலிக்காக சாலமன் பாப்பையா உடல் ஞானஒளிவுபுரம் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டது. அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது.
பல்லாயிரம் பட்டிமன்றங்கள் மூலம் மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தார். தொலைக்காட்சிகள் மட்டும் பிரபலமாக இருந்த காலத்தில் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அவரது பட்டிமன்றம் இல்லாமல் நிகழ்ச்சிகள் இருக்காது. அந்தளவுக்கு பட்டமன்ற நடுவர்களில் புகழின் உச்சத்தில் இருந்தவர். தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய தொண்டை பெருமைப்படுத்தும் வகையில் கடந்த 2000-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதும், 2021-ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை
அடுத்து, மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அவரது உடல் இன்று துப்பாக்கி குண்டுகள் முழக்கம் இல்லாமல் சாலமன் பாப்பையாவின் உடலுக்கு கவுரவ மரியாதை அளிக்கப்பட்டது. அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல்குமார், விஸ்வநாதன் ஆகியோர் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இதையடுத்து தத்தநேரி மின் மயானத்தில் சாலமன் பாப்பையாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
