கேரளாவில் நிலவி வரும் மிகமோசமான மின்வெட்டை விமர்சித்து மின்வாரிய ஊழியர்களுடன் முதல்வர் வி.டி. சதீசன் நடனமாடுவது போல் உருவாக்கப்பட்ட ஏஐ வீடியோ குறித்து கருத்து தெரிவித்த கேரள முதல்வர் வி.டி. சதீசன், “மோகன்லால் மற்றும் தமிழக முதல்வர் விஜய்யை விட நான்தான் சிறப்பாக நடனமாடுகிறேன்” எனக் கூறியது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் முன்னறிவிப்பின்றி மின்தடை மற்றும் மின்சார கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள், மாணவர்கள், பணிபுரிபவர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மின்வெட்டு தொடர்பாக கேரள மின்வாரியத்தையும், முதலமைச்சர் வி.டி. சதீசன் தலைமையிலான அரசையும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மின்வெட்டுக்கு ஒவ்வொரு முறையும் வித்தியாசமான பெயர்களை வைத்து மீம்ஸ்கள் மற்றும் ட்ரோல் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். “பூக்கி கட்”, “இந்திரா கட்”, “சதீசன் கட்” உள்ளிட்ட பெயர்களில் மின்வெட்டை கிண்டல் செய்யும் பதிவுகள் வைரலாகியுள்ளன.
இந்த சூழலில்தான், முதலமைச்சர் சதீசன் மற்றும் கேரள மின்வாரிய ஊழியர்கள் இணைந்து நடனமாடுவது போன்ற ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அந்த வீடியோவில் சதீசன் நடனமாடுவது போன்று காட்சிகள் உருவாக்கப்பட்டிருந்தன. இந்த வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான பார்வைகளும், பல்வேறு நகைச்சுவை கருத்துகளும் கிடைத்தன.
வீடியோவை பார்த்த முதல்வர் என்ன சொன்னார்?
கொச்சியில் நடைபெற்ற “Music, Cinema and Law: Exploring the Intersections of Art, Culture and Law” என்ற கருத்தரங்கில் சதீசன் இந்த ஏஐ வீடியோ குறித்து பேசினார்.
சமூக வலைதளத்தில் தன்னை வைத்து உருவாக்கப்பட்ட வீடியோவை பார்த்ததாக தெரிவித்த அவர், “நானே முன்னின்று நடனமாடுவது போன்ற வீடியோவை சமூக வலைதளத்தில் பார்த்தேன். அதை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன்” என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
அதோடு நிற்காமல், மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் தனது “நண்பர்” எனக் குறிப்பிட்ட தமிழக முதல்வர் விஜய் ஆகியோரைவிட தான்தான் சிறப்பாக நடனமாடுவதாகவும் சதீசன் கிண்டலாகக் கூறினார்.
இதனால் நிகழ்ச்சியில் சிரிப்பலை எழுந்ததுடன், சதீசனின் இந்த கருத்தும் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. மின்தடை குறித்து நடவடிக்கை எடுக்காமல், காங்கிரஸ் கட்சியினருக்கு ரீல்ஸ் கன்டென்ட் கொடுத்து வருவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
